Type Here to Get Search Results !

பிஹாரில் காலியாக இருக்கும் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலில் சுஷில் குமார் மோடி போட்டி: பாஜக முடிவு



பிஹாரில் காலியாக இருக்கும் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலில், முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடியை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பிஹாரில் டிசம்பர் 14-ம் தேதி நடக்கும் மாநிலங்களவை இடைத் தேர்தலில் பாஜக சார்பில் சுஷில் குமார் மோடியின் பெயரை அறிவித்தார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப்பின், அவருக்கான மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாக இருக்கிறது. இதற்கான இடைத் தேர்தல் டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.

இந்தத் தேர்தலில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடியை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது. மாநிலங்களவை இடைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி போட்டியிடாமல் இருந்தால், போட்டியின்றி சுஷில் குமார் மோடி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

தற்போது பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 125 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருப்பினும் ஒரு இடத்துக்காக நடக்கும் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு லோக் ஜனசக்தி கட்சி, அசாசுதீன் ஒவைசி கட்சி ஆகியோர் ஆதரவு அளிக்கும் பட்சத்தில்இடைத் தேர்தல் விறுவிறுப்பாக அமையும்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 4 ஆண்டுகளாக துணை முதல்வராக சுஷில்குமார் மோடி இருந்தார். ஆனால், நிதிஷ் குமாருடன் அதிகமான நெருக்கம் காட்டியதால், சுஷில்குமார் மோடிக்கு இந்த முறை எம்எல்ஏ சீட் வழங்கப்படவில்லை, துணை முதல்வர் பதவியும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக பாஜகவின் தார்கிஷோர் பிரசாத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே பல்வேறு விரிசல்கள், முரண்பாடுகள் ஏற்பட்டபோதெல்லாம் சுஷில் குமார் மோடி இணைப்புப் பாலமாக இருந்து உறவில் பிளவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

இந்நிலையில் மாநிலப் பணியிலிருந்து சுஷில் குமார் மோடியை மத்திய கட்சிப் பணிக்கு மாற்றும் முயற்சியில் அவரை மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் நிறுத்த பாஜக முடிவு செய்து நேற்று அறிவித்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom