Type Here to Get Search Results !

பயிர்க் கடன், டிராக்டர் கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி பொருந்தாது: மத்திய நிதியமைச்சகம் விளக்கம்



மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பு பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, ரூ.2 கோடிவரை கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. அவ்வாறு கூட்டு வட்டியுடன் தவணையைச் செலுத்தியவர்களுக்கு நிலையான வட்டிபோக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகை நவம்பர் 5-ம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவித்தது.

இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடி வரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி விவகாரத்தில், பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குச் சலுகை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''பிப்ரவரி 29-ம் தேதி கணக்கின்படி, கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கியோர், மாதத் தவணை செலுத்துவோர் தவணையுடன் கூட்டு வட்டி செலுத்தி இருந்தால், அவர்களுக்கான நிலையான வட்டி மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, கூடுதல் வட்டித்தொகை வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.

ஆனால், கரோனா காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படாது. இந்த வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்துக்குள் வரமாட்டார்கள்''.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அனைத்து வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி, மத்திய அரசு கூறியதுபோல், ரூ.2 கோடி வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி சலுகையை நவம்பர் 5-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தவணை செலுத்தியவர்கள் கூட்டு வட்டியுடன் செலுத்தியிருந்தால், வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால், நிலையான வட்டியை மட்டும் கணக்கிட்டு மீதத்தொகையை வங்கிக் கணக்குதாரர் கணக்கில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையைப் பெறாமல் தவணை செலுத்தியவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்தத் திட்டத்தால் மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ.6,500 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom