Type Here to Get Search Results !

காங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு



வேளாண் சட்டங்களைப் பற்றித் தவறாகக் கூறி, விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று காங்கிரஸ் மீது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனவும், மண்டி முறையை ஒழிப்பது கார்ப்பரேட்களுக்கும் தனியார்களுக்கும் சாதகமானது என்றும், இவை விவசாயத்தை அழிக்க வந்த சட்டங்கள் என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸை விமர்சித்துள்ளார்.

கமல் சர்மா நினைவாஞ்சலிக் கூட்டம் புதன்கிழமை இரவு சண்டிகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனது நினைவாஞ்சலி உரைக்குப் பிறகு வேளாண் சட்டங்கள் குறித்துப் பேசியதாவது:

''வேளாண் சட்டங்களை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் மக்களை முட்டாளாக்க முயல்கின்றன. அவர்கள் அனைவரும் மூன்று வேளாண் சட்டங்களை அரசியல் காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்கின்றனர். விவசாயிகளுக்கு எந்தச் சீர்திருத்தமும் வழங்க முடியாத நிலையில் அனைத்துக் கட்சிகளும் விவசாயிகளை ஏமாற்றி வந்தன.

உண்மையில், காங்கிரஸ், அதன் 2017 தேர்தல் அறிக்கையில் செய்த வாக்குறுதிகளையே எதிர்க்கிறது. அது இப்போது மோடி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது.

விவசாய மண்டிக் கொள்முதலை அகற்றிவிட்டு ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்திருந்தது. இதைத்தான் மோடி அரசாங்கம் தற்போது சட்ட மசோதாக்கள் மூலம் உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் தனது அறிக்கையில் தவறான வாக்குறுதிகளை அளித்ததாக இன்று தெரிவிக்கத் தயாரா?

விவசாயிகளின் நலனுக்காக ஒருபோதும் பணியாற்றாத காங்கிரஸ், விவசாயிகளை முட்டாளாக்குவதற்காக மோசமான அரசியலைச் செய்து வருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஒன்றுமே செய்யவிலலை. இன்னும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையைக் கூட செயல்படுத்தவில்லை.

மோடி அரசாங்கம் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு ஒரு பயிரின் விலையில் ஒன்றரை மடங்கு அதிக விலைக்கு உறுதியளித்து வழங்கியுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் கட்டப்பட்டிருந்த பழைமைவாத அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், புதிய விதிகளின் கீழ் விவசாயிகள் இப்போது உள்ளூர் மண்டிகளுக்கு அப்பாலும் தங்கள் விளைபொருட்களை விற்க முடியும்''.

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom