Type Here to Get Search Results !

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு ராஜினி விலக திட்டமிட்டுள்ளாரா?



கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமூக ஊடகங்கள் வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல் ஒரு கடிதம் பரவி வருகிறது. இக்கடிதம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையைக் கிளப்பியிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்று திட்டமிட்டதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்றும், அடுத்தகட்ட கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வந்ததை நினைவு கூர்ந்துள்ள ரஜினி , 2016 மே மாதத்தில் மறுபடியும் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டதாகவும், கொரோனா தொற்று தம்மை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம் இருப்பதால், கொரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

தமது உயிர் பற்றிய கவலை இல்லை என்றும், அதே நேரத்தில் தம்மை நம்பி வருவோரின் நலன் குறித்துத்தான் கவலை என்றும் கூறியுள்ள ரஜினி, மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும், அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும் என்பதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவுக்கே இதனை விடுவதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இது உண்மையிலேயே ரஜினி எழுதிய கடிதம்தானா என உறுதிப்படுத்த முடியாத நிலையில் ரஜினி மன்ற நிர்வாகிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom