Type Here to Get Search Results !

பினீஷ் கொடியேறியின் பினாமியாகச் செயல்பட்ட போதைமருந்து கும்பல்: அமலாக்கப் பிரிவு விசாரணையில் புதிய தகவல்



கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி, போதைமருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில், பினீஷின் பினாமியாக போதைமருந்து கும்பல் செயல்பட்டுள்ளது அமலாக்கப் பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் போதைமருந்து கடத்தியதாக அனூப், அனிகா, ரவிந்திரன் ஆகியோரை தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 145 எம்எம்டிஏ போதை மாத்திரைகளையும், ரூ.2.20 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த போதைமருந்து கடத்தல் கும்பலுக்கும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது. இந்தக் கும்பலுக்குத் தேவையான நிதியுதவியை பினீஷ் கொடியேறி செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

தேசிய போதைமருந்து தடுப்புப் பிரிவினர் கிரிமினல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக கடந்த மாதம் 9-ம் தேதி பினீஷ் கொடியேறியிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்திய நிலையில், நேற்று விசாரணைக்கு பெங்களூரு அழைத்திருந்தனர்.

இதில் போதைமருந்து கும்பலுடன் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்திருப்பது உறுதியானதையடுத்து, பினீஷ் கொடியேறியை அமலாக்கப் பிரிவு கைது செய்தது. அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நவம்பர் 2-ம் தேதிவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “போதைமருந்து கடத்தலில் கைதாகியுள்ள முக்கியக் குற்றவாளி அனூப்பிற்கு ஏராளமான பணத்தை பினீஷ் கொடியேறி அனுப்பியுள்ளார். அனூப்பிடம் விசாரணை நடத்தியபோது, பினீஷ் கொடியேறியின் பினாமியாகச் செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், பினீஷ் கொடியேறியிடம் நிதியுதவி பெற்றுத்தான் போதை மருந்துகளை வாங்கி விற்பனை செய்ததும் இதற்காக பல்வேறு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அதில் பினீஷ் கொடியேறி பணம் செலுத்தி வந்தார் என்றும் விசாரணையில் அனூப் தெரிவித்துள்ளார்.

பினீஷ் கொடியேறி, அனூப் இடையே பணப்பரிமாற்றம் செய்துகொள்ள பல்வேறு வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் கணக்கில் வராத பணம் அடிக்கடி பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் அதிகமான அளவு அனூப் கணக்கிற்கு பினீஷ் கொடியேறியால் செலுத்தப்பட்டுள்ளது.

பினீஷ் கொடியேறியின் நிதி தொடர்பானவற்றுக்கு பினாமியாக அனூப் இருந்தது தெரியவந்துள்ளது. பினீஷ் கொடியேறியின் சொல்படிதான் பல்வேறு நிதிப் பரிமாற்றங்களை அனூப் செய்துள்ளார். ஆனால், இன்னும் முழுமையாக அனூப் பரிமாற்ற விவரங்களைக் கூறவில்லை” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த போதைமருந்து கடத்தல் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் சில முக்கிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்களும் சிக்குவார்கள் என போதைமருந்து தடுப்புப் பிரிவினர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom