Type Here to Get Search Results !

எஸ்.பி.பி. மருத்துவக் கட்டணச் சர்ச்சை: மகன் சரண் அளித்த விளக்கத்தின் முழு விவரம்



எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளார்கள். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு எஸ்.பி.பி. மகன் சரண் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் பதில் அளித்துள்ளார்கள். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி. சரண் கூறியதாவது:

அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் வதந்திகள் உருவாகி வருகின்றன. அப்பாவுக்குச் சிகிச்சை அளித்த நான்கு மருத்துவர்களும் இங்கு உள்ளார்கள். இவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம். அவர்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார்கள். அப்பாவை நன்குக் கவனித்துக்கொண்டார்கள். என்னிடம் தினமும் பேசுவார்கள், கேட்டுக்கொள்வார்கள். மருத்துவ அறிக்கை அளிப்பதாக இருந்தாலும் எங்கள் குடும்பத்தினரிடம் ஆலோசனை செய்துகொள்வார்கள். எங்களிடம் ஆலோசித்துவிட்டுத்தான் எல்லா சிகிச்சைகளையும் செய்தார்கள். 

அப்பாவை இழந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் கூட இல்லாமல் தினமும் ஏதாவது ஒரு பிரச்னைகளைக் கிளப்பி வருகிறார்கள். மருத்துவமனையை முழுவதுமாக நம்பினோம். அதில் எந்த வருத்தமும் இல்லை. எங்களுக்கு ஒன்று என்றால் இந்த மருத்துவமனை நிற்கும். இந்த மருத்துவமனைக்கு ஒன்று என்றால் நாங்கள் நிற்போம்.

மருத்துவக் கட்டணம் அதிகமாக இருந்தது. எங்களால் அதைச் செலுத்த முடியவில்லை. தமிழக அரசிடம் பேசினோம். அவர்கள் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. இதனால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் பேசினேன். அவர்கள் களத்தில் இறங்கி, குடியரசுத் துணைத் தலைவரின் மகள் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தினார்கள் என்கிற அருமையான ஒரு கதை வந்தது. நீங்கள் என்னிடம் கேட்கும்போதே அது உண்மை இல்லை என்பது உங்களுக்குத் தெரிகிறது. இந்த வதந்திக்குத் தேவையில்லாமல் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம். 

மருத்துவமனையில் அப்பாவின் சிகிச்சைக்கு என்ன கட்டணம் சொன்னார்களோ அதன் ஒரு பகுதியை நாங்கள் தொடர்ந்து செலுத்திக்கொண்டு வந்தோம். மருத்துவக் காப்பீடு கட்டணத்தின் ஒரு பகுதியைப் பார்த்துக்கொண்டது. பணம் எங்களுக்கு முக்கியம் இல்லை. அப்பா திரும்ப வரவேண்டும் என நினைத்தோம். ஒவ்வொரு வாரமும் நாங்கள் பணம் செலுத்தி வந்தோம். அப்பா இறந்த பிறகு மீதிக் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டுமா என நெருங்கிய நண்பராக உள்ள மருத்துவரிடம் தான் கேட்டேன். கடைசி நாளன்று எங்களுடைய கணக்காளரும் மருத்துவமனையில் இருந்தார். நாங்கள் பணத்துடன் அங்கே சென்றிருந்தோம். ஆனால், மருத்துவமனை சேர்மனிடமிருந்து வந்த தகவல் - அவர்களிடம் எந்தக் காசும் வாங்கவேண்டாம். எவ்வளவு சுமூகமாக எஸ்.பி.பி. உடலை வீட்டுக்குக் கொண்டுபோக முடியுமோ அந்த வசதிகளைச் செய்து தரவும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இதுதான் நடந்த விஷயம். 

மருத்துவமனை நிர்வாகம் கோரும் எந்தவிதமான உதவியையும் தமிழக அரசு செய்ய முன்வந்துள்ளதாகத் தகவல் வந்தது. அது என்னவிதமான உதவி என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக மருத்துவத்துறைச் செயலாளரிடம் பேசினேன். அமைச்சரிம் விசாரித்து பேசுகிறேன் என்றார். மருத்துவக் கட்டணம் தொடர்பாக எங்களுக்கு ஒத்துழைக்க முடியுமா எனத் தமிழக அரசு சார்பாக மருத்துவமனையிடம் பேசியிருந்தார்கள். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என சேர்மன் பதில் கூறியுள்ளார். இந்த முடிவை எப்போது எடுத்தார்கள் என்று தெரியாது. எங்களுக்கும் மருத்துவமனைக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தாததால் தான் நான் அடுத்த நாள் எஸ்.பி.பி. இறந்தது பற்றி அறிவித்தேன் என்றும் கதை கூறியுள்ளார்கள். அப்பா இறந்த நேரத்தையும் அன்றைக்குக் சொல்லியிருந்தேனே! இறப்புச் சான்றிதழிலும் அந்த நேரம் தான் இருக்கும். அதற்குள் ஏன் கதை கட்டவேண்டும்?

அப்பாவுக்குப் பிரமாண்டமாக நினைவு இல்லம் கட்டவேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதற்கான திட்டமிடல் நடந்து கொண்டிருக்கிறது. என் சக்தியால் முடிந்ததைச் செய்வேன். இப்போது பண்ணை வீட்டில் அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொது மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு கருதி நான்கு நான்கு பேராக அனுமதிக்கிறார்கள். அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தக்கூடிய விதத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துத் துறைகளிடமும் பேசி ஒரு வாரத்தில் முழு விவரத்தையும் அறிவிக்கிறேன். 

அஜித் எனக்கும் அப்பாவுக்கும் நல்ல நண்பர். அவர் வந்து பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன! அவர் வரவேண்டிய அவசியம் இல்லை. அவர் மரியாதை எங்கு செலுத்தினால் என்ன? அது ஒரு பிரச்னை இல்லை இப்போது.

அப்பா சைகையில் பேசினார். நகைச்சுவை உணர்வுடன் இருந்தார். சொல்ல வேண்டியதை எழுதிக் காண்பித்தார்.

அப்பா இறந்தது கரோனாவால் அல்ல. நுரையீரல் பாதிப்பை சரிசெய்வதுதான் எங்களுக்குப் பிரச்னையாக இருந்தது.

தினமும் ஏதாவது ஒரு வதந்தி வந்து அதற்கு நாங்கள் பதில் அளிக்கவேண்டியதாக உள்ளது. அப்பாவை இழந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர எங்கள் குடும்பத்துக்குக் கால அவகாசம் கொடுங்கள் என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom