முதல்வர் பெயர் புறக்கணிப்பா?: தேனியில் சலசலப்பு
ஆண்டிபட்டி அருகே உயர்கோபுர மின்விளக்கு திட்ட மதிப்பீட்டு கல்வெட்டில், முதல்வர் பழனிசாமி பெயர் புறக்கணிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் கடந்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கல்வெட்டு வைக்கப்பட்டது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதி முன்னாள் எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில் முதல்வர் பழனிசாமி பெயர் இல்லாததால், அதிமுக.,வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்டத்தில் முதல்வர் ஓபிஎஸ்., என ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது அக்கட்சியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் வெளிப்பட்டது. ஆனாலும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்குள் கல்வெட்டில் பெயர் புறக்கணிக்கப்பட்டது மேலும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

Post a comment

0 Comments