லடாக்கில் அத்துமீறிய சீன வீரர்களை விரட்டியடித்த இந்திய வீரர்கள்
லடாக்கின் கிழக்கு பகுதி அருகே பாங்காங் சோ ஏரி அருகே அத்துமீறலில் ஈடுபட்ட சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இதனால், எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக்கின் கிழக்கு பகுதியில், அத்துமீறிய சீன ராணுவத்தினர் கடுமையாக தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த மோதலில் சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் இல்லை. இதனால், ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் சீன வீரர்கள், லடாக்கின் கிழக்கு பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஆக.,29/30 இரவுகளில், லடாக்கின் கிழக்கு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு, தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர்.
சீன வீரர்களின் செயல், கடந்த காலங்களில் ராணுவம் மற்றும் தூதரகம் ரீதியில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிரானது. பாங்காங் சோ ஏரியின் தெற்கு பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்ததுடன், நமது நிலையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அங்கு நிலவும் சூழலை சிதைக்க முயன்ற சீனாவின் நோக்கத்தையும் தடுத்து நிறுத்தினோம்.

பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்திய ராணுவம் உறுதிபூண்டுள்ளது. அதேநேரத்தில், நமது எல்லையின் இறையாண்மையை பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளோம். பிரச்னையை தீர்க்க சுசூல் பகுதியில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments