சீனாவில் இருந்து தபாலில் வரும் விதைகள் விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம் என எச்சரிக்கைஅமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பலருக்கு, தபால் மூலம், மர்ம விதைகள் அடங்கிய, 'பார்சல்' அனுப்பப்பட்டு வருகிறது. அந்த தபால், சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.'அதை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்; அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம்' என, கனடா எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசை பரப்பியது தொடர்பாக, அமெரிக்கா -- சீனா இடையே, கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. துாதரகங்களை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில், இரு நாடுகளுமே ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், தபாலில் வரும் மர்ம விதைகள் அடங்கிய பார்சல்கள், தற்போது அமெரிக்காவை அலறச் செய்துள்ளது.
அமெரிக்காவின் அலபாமா, கொலராடோ, ப்ளோரிடா, லோவா, கன்சாஸ், ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட, 28 மாகாணங்களை சேர்ந்த பலருக்கு, கடந்த சில நாட்களாக மர்ம பார்சல் ஒன்று வருகிறது.அதற்குள் சிறிய, 'ப்ளாஸ்டிக்' பையில் அடைக்கப்பட்ட விதைகள் இருக்கின்றன. 'அந்த பார்சல், தெரிந்தவர்களிடம் இருந்தோ, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தோ வரவில்லை' என, அதை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அந்த பார்சலில், சீன எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

சில பார்சல்களில், 'உள்ளே தங்க ஆபரணம் இருக்கிறது' என, வௌிப்பக்கம் குறிப்பிடப்படுகிறது; உள்ளே பிரித்துப் பார்த்தால், விதை இருக்கிறது.இது குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா மற்றும் பிரிட்டனிலும், இது போன்ற மர்ம விதைகள் கொண்ட பார்சல், பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கனடாவில், பண்ணை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கு, இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. 'பார்சலில், விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம். அதை, நிலத்தில் பயிரிட வேண்டாம்' என, கனடா உணவு கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், வாங் வென்பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:தபால் மூலம் விதைகளை அனுப்ப, எங்கள் நாட்டு தபால் துறை அனுமதிக்காது. அந்த பார்சல்களின் மேல் உள்ள சீன தபால் முத்திரைகள் போலியானவை என, எங்கள் தபால் துறை தெரிவித்துள்ளது. அந்த பார்சல்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால், விரிவாக ஆய்வு செய்து, விபரங்களை தெரிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமெரிக்க பார்லி.,யில் மசோதா'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை, சீனாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை, அரசுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு கட்சியை சேர்ந்த, செனட்டர் மார்த்தா மெக்சாலி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.


Post a comment

0 Comments