Type Here to Get Search Results !

அல்லல்படும் ஹாங்காங்வாசிகள்; சீன அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது



சீனா ஹாங்காங் மீது தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கடந்த ஜூலை 1ஆம் தேதி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சீன கம்யூனிச அரசுக்கு எதிராக போராடும் ஜனநாயக ஆதரவாளர்களை அவ்வப்போது கைது செய்து வந்தது. சீன அரசின் இந்த செயலுக்கு உலக நாடுகள் பல, கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பை தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா ஹாங்காங் உடனான வர்த்தகத் தொடர்பை துண்டித்துக் கொண்டது.

தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்த மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவர்கள் ஆவர். 16 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். ஹாங்காங் விடுதலையை ஆதரிக்கும் புரட்சி அமைப்பை சேர்ந்த இவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஹாங்காங் குடிமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை வெளியிட சீன போலீசார் மறுத்து விட்டனர். ஸ்டூடண்ட்ஸ் லோக்கல் என்ற மாணவர் அமைப்பை சேர்ந்த இவர்கள் தங்களது அமைப்பின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களது தலைவர் டோனி சங். இவரது தலைமையிலேயே இந்த மாணவர் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பொதுவாகவே சீனாவில் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டால் தளங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் சமூகவலைதளத்தில் தனிநபர்கள், கம்யூனிஸ அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தால் உடனடியாக முன்னறிவிப்பு இல்லாமல் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த மாணவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 20 மற்றும் 21 ஆகிய பிரிவில் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகளும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளும் சிறை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சீன போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோரை சீனாவில் இருந்து முற்றிலுமாக களையவே, இந்த கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுவதாக சீன காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் மீதான சீனாவின் இந்த நடவடிக்கை பிறநாட்டு இணைய பயனாளர்களிடம் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. சீனாவின் சர்வாதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom