டிக்டாக் நிறுவனம் இந்தியாவின் தகவல்களை எந்தவொரு நாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லைடிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்ய மாட்டோம் எனவும் டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி விளக்கமளித்துள்ளார்.

கடந்த மாதம் 29ம் தேதி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் ஆபத்தை தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு காரணமாகவும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக கொண்டுள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் செயலிக்கு சர்வதேச அளவில் இருக்கும் ஒட்டுமொத்த பயனாளர்களில் பாதிக்கு மேலான பங்களிப்பு இந்தியாவில் இருந்தது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால் டிக்டாக் நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மட்டும் ரூ.44,790 கோடி வரையில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, ப்ளாக் (Blog) எனப்படும் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது: டிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்யாது. எங்கள் செயல்பாடுகளின் காலம் முழுவதும், பயனர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்புத் தேவைகள் உள்ளிட்ட உள்ளூர் சட்டங்களுடன் இணங்குவதற்கான தெளிவான உறுதிப்பாட்டை நாங்கள் நிரூபித்துள்ளோம். மத்திய அரசிடம் எங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும், அரசுக்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Post a comment

0 Comments