கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன: விஜயபாஸ்கர்



கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதனால் ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கு ஏற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு ‛ஆரோக்கியம்' திட்டத்தினை ஏப்.,23ல் முதல்வர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது.

சிறுவில்வம், திப்பிலி வேர், தலைமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம், கடுக்காய் உள்ளிட்ட 27 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயணம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் டாக்டரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும். ஏற்கனவே தமிழக அரசால் சித்தா மருந்தான கபசுர குடிநீரும், ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30சி-ம் எவ்வித கட்டணமில்லாமல் வழங்குவது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments