'முத்து' இனி பாதிக்கப்படாது; 260 நாட்களுக்குப் பிறகு மரக் கூண்டிலிருந்து 'ரிலீஸ்'பொள்ளாச்சி அடுத்த அர்த்தநாரிபாளையத்தில் கடந்தாண்டு நவ., 9ம் தேதி, விளைநிலத்துக்குள் புகுந்த ஒற்றை ஆண் யானை தாக்கியதில், விவசாயி ராதாகிருஷ்ணன், 55, இறந்தார்; திருமாத்தாள், 50, என்பவர் காயமடைந்தார். இந்த சம்பவத்திற்கு முன், நவமலையில், 7 வயது குழந்தை உட்பட இருவர் இந்த யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.

மக்களால், 'அரிசி ராஜா' என அழைக்கப்பட்ட இந்த யானையைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதற்காக, டாப்சிலிப் முகாமில் உள்ள, 'கலீம், கபில்தேவ்' என்ற இரு கும்கி யானைகளை அழைத்து வந்தனர். கும்கிகளின் உதவியுடன் நவ., 14ம் தேதி அந்த யானையைப் பிடித்து, டாப்சிலிப் வரகளியாறில் மரக்கூண்டில் (கிரால்) அடைத்தனர். 19 வயதான அந்த யானைக்கு வனத்துறையினர், 'முத்து' எனப்பெயரிட்டு கடந்த, எட்டு மாதங்களாக பயிற்சியளித்து வந்தனர். தற்போது அந்த யானை, உத்தரவுகளை புரிந்து நடந்து கொள்வதால், மரக்கூண்டில் இருந்து இன்று வெளியே கொண்டு வந்துள்ளனர்.

புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் செல்வம் கூறுகையில், ''260 நாட்கள் பயிற்சிக்குப்பின் 'முத்து' யானை, மரக்கூண்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டுள்ளது. பாகன்களின் கட்டளைகளை புரிந்துகொண்டு, கீழ்ப்படிந்து நடக்கிறது. 'முத்து'வால் இனி யாருக்கும் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.

Post a comment

0 Comments