Type Here to Get Search Results !

சர்வதேச விமான சேவை மீள்வதற்கு 2024ம் ஆண்டு வரை ஆகலாம்'



கொரோனா நெருக்கடியில் இருந்து சர்வதேச விமான சேவை மீள்வதற்கு 2024ம் ஆண்டு வரை ஆகலாமென சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐ.ஏ.டி.ஏ) கணித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 290 விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் , பயணிகளின் நம்பிக்கையின்மை, வணிக ரீதியான பயணங்கள் சரிவு மற்றும் அமெரிக்காவிலும் பிற இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளே மந்தநிலைக்கு காரணமென குற்றம்சாட்டியுள்ளது.கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கை 55 சதவீதம் சரிவை சந்திக்குமென கணித்துள்ளது.

முன்னதாக ஏப்ரலில், 46 சதவீதம் அளவுக்கு சரிவை சந்திக்குமென கணித்திருந்தது. அடுத்தாண்டு (2021) பயணிகள் எண்ணிக்கை 62 சதவீதமாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது இன்னும் 30% குறைந்துவிடும். கொரோனா தொற்றுக்கு முந்தைய அளவுக்கு முழுமையாக மீட்சியடைய, இப்போது முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகுமென கூறியுள்ளது.'கடந்த ஏப்ரலில் பயணிகள் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் எழுச்சியின் வலிமை மிகவும் பலவீனமாக உள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தில் மட்டுமே நாம் முன்னேற்றத்தை காண்கிறோம்' என சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் டைரக்டர் ஜெனரலும், சி.இ.ஓவுமான அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியப்படத்தக்க வகையில், பயணிகளுக்கு வசதியாக இருப்பதால், குறுகிய தூர விமான பயணம், நீண்ட தூர பயணத்தை விட விரைவில் மீளுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் சர்வதேச சந்தைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஸ்பெயினிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற இங்கிலாந்தின் இறுதி முடிவு, நுகர்வோரின் நம்பிக்கையை சோர்வடைய செய்துள்ளது.

உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை, சீன விமானநிறுவனங்கள் மீட்பில் முன்னணியில் உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 35.5 சதவீதமாக குறைந்தது. ஆனால் இது மே மாதத்தில் 46.3 சதவீதத்தில் சரிவிலிருந்து அதிகரித்துள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் விஞ்ஞான முன்னேற்றங்கள், வெற்றிகரமான தடுப்பூசியை உருவாக்குவது உள்ளிட்டவை விரைவாக மீட்க அனுமதிக்கும் என்று ஐஏடிஏ கூறுகிறது. ஆனால் இப்போதைக்கு, எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது. உலகின் பல பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னமும் அதிகரித்து வருகின்றன. இவை அனைத்தும் நீண்ட கால மீட்புக் காலத்தையும், தொழில் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அதிக வலியையும் சுட்டிக்காட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom