Type Here to Get Search Results !

வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்



ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள், வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய பணிகளை பார்ப்பதற்கு, முன்பை விட, தற்போது தங்களுக்கு அதிக கூலி கிடைப்பதாக, அவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 25ல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டில்லி, ஹரியானா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தினக் கூலிகளாக பணியாற்றி வந்த, வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

முதலாளிகள் கைவிரித்ததால், சொந்த மாநிலங்களை நோக்கி சாரை சாரையாக அணிவகுத்துச் சென்றனர். ஊரடங்கால் போக்கு வரத்து முடக்கப்பட்டதால், பல நுாறு கி.மீ்ட்டர் நடை பயணமாகவே குழந்தைகள், உடைமைகளுடன் சென்றனர். இவ்வாறு சென்ற தொழிலாளர்கள் சிலர், ரயில் மற்றும் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினர்.

இதையடுத்து, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, சிறப்பு ரயில்களை இயக்கி, தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், தமிழகம், டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பாதிப்பு குறைவாக உள்ளதால், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் விவசாயம், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.

ஆனால், இவற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டதால், வேலைக்கு ஆள் கிடைக்காமல் முதலாளிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றிய தொழிலாளர்களை தொடர்பு கொண்டு, முன்பை விட அதிக சம்பளம் தருவதாகவும், கணிசமான முன் பணம் தருவதாகவும் கூறி, அவர்களை மீண்டும் வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில், விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் பலரும் திண்டாடுகின்றனர், பணிகள் பாதியில் நிற்பதால், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், கட்டுமான பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, சொந்த மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு, அங்கு வேலைவாய்ப்பு இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல், வறுமையில் வாடுவதாக வருத்தத்துடன் கூறுகின்றனர். இதையடுத்து, உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து, பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, ஏராளமான தொழிலாளர்கள் மீண்டும் திரும்பத் துவங்கி உள்ளனர்.

முதலாளிகளில் சிலர், 'விமான டிக்கெட் கூட எடுத்து தருகிறோம்; தயவு செய்து வேலைக்கு வாருங்கள்' என, கெஞ்சத் துவங்கிஉள்ளனர். சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இது குறித்து, கிழக்கு மத்திய ரயில்வே மண்டல மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ராஜேஸ் குமார் கூறியதாவது: பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஆமதாபாத், அமிர்தசரஸ், செகந்திராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், ஏராளமான தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். தேவைப்பட்டால், இந்த நகரங்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

.பீஹாரின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த குஷோ மண்டல் என்ற தொழிலாளர் கூறியதாவது:ஊரடங்கிற்கு முன், பஞ்சாப் மாநிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த மாநிலத்துக்கு வந்தேன்.அரசு தரப்பில் தருவதாக கூறப்பட்டிருந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை, எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.இங்கு தொடர்ந்து தங்கியிருந்தால், பசியில் இறப்பதை தவிர வேறு வழியில்லை. இதனால், மீண்டும் பஞ்சாப் செல்ல முடிவு செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜிவ் சவுபால் என்ற தொழிலாளர் கூறியதாவது:பஞ்சாபில் ஏற்கனவே விவசாய வேலை பார்த்த இடத்திலிருந்து, மீண்டும் அழைப்பு வந்துள்ளது.ஒரு ஏக்கரில் விவசாய பணிகளை முடிப்பதற்கு, ஊரடங்கிற்கு முன், 3,500 ரூபாய் தந்தனர். தற்போது, 5,000 ரூபாய் தருவதாக முதலாளி உறுதி அளித்துள்ளார்.மேலும், முன் பணமாக எங்கள் குடும்பத்திற்கு, 15,000 - 20, 000 ரூபாய் வரை தருவதாக தெரிவித்துள்ளார். அதனால், பஞ்சாபுக்கு செல்ல முடிவு செய்துஉள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom