Type Here to Get Search Results !

முதல்வர் பழனிசாமி, மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை வேகப்படுத்தி வருகிறார்

எந்த நேரத்திலும் எடப்பாடி ...

வரும், 2021, மே மாதம் நடைபெற உள்ள,தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு பணியை ஆய்வு செய்யும் போர்வையில், மாவட்டம் வாரியாக செல்ல துவங்கியுள்ள, முதல்வர் பழனிசாமி, மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.

ஏனெனில், தற்போதைய அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2021, மே மாதம் முடிகிறது. மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்பதால், இன்னும், 10 மாதங்களே இருக்கின்றன. 2021, ஜன.,யில், புதிய வாக்காளர் பட்டியல் தயாராகி விடும். தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியிட்டால், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அதன் பின், எவ்வித அறிவிப்பும் வெளியிட முடியாது. அதிகாரிகளும், தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து விடுவர்.அதன் காரணமாக, அ.தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய திட்டங்களை, வரும் டிச.,க்குள் துவக்கி, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

அதற்காக, 'கொரோனா' வைரஸ் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதுபோல், மாவட்டம் வாரியாக, ஆய்வை துவக்கியிருக்கிறார், முதல்வர் பழனிசாமி.சமீபத்தில் கோவையிலும், திருச்சியிலும்,'கொரோனா' தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர், விவசாயிகள் சங்க பிரமுகர்களை அழைத்து, வேளாண்மை சிறக்க, தமிழக அரசு செய்துள்ள பணிகள், இனி செயல்படுத்த உள்ள திட்டங்களை பட்டியலிட்டார்.

நொய்யல் ஆறு நீர் வழித்தடங்கள், குளங்களை சீரமைக்க, 230 கோடி ரூபாய் ஒதுக்கி, பணியை துவக்கியிருப்பதை, தவறாமல் சுட்டிக் காட்டினார்.மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கனவான, அவிநாசி - அத்திக்கடவு திட்டம், 2021, டிசம்பரில் முடியும் என உறுதி கூறிய அவர், விடுபட்ட பகுதிகளை சேர்த்து, இரண்டாவது திட்டம் செயல்படுத்த, அரசு பரிசீலித்து வருவதாக, உறுதியளித்தார்.

இது, விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டல விவசாயிகளை, தங்கள் பக்கம் ஈர்க்க, இவ்விரு 'மெகா' திட்டங்களும் போதுமென நினைக்கிறார்.அதன் பின், மகளிர் சுய உதவி குழுவினரை அழைத்து, தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். கடைசியாக, தொழில்துறையினரை சந்தித்தார். சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கிய கடனுதவி, மூன்று மாதம் மின் கட்டணம் தள்ளுபடி உள்ளிட்டவற்றை விளக்கிய முதல்வர், தொழில்துறையினர் கோரிக்கையை பொறுமையாக கேட்டறிந்தார்.முன்னதாக, கோவை மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நட்டு, துவக்கி வைத்தார். தற்போது நடந்து வரும் பணிகளை, பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தேர்தலுக்கு அச்சாரமாக, இப்போதே பணிகளை வேகப்படுத்தி, பிள்ளையார் சுழி இட்டுச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க.,வினரிடம் கேட்டபோது, 'கொரோனா தடுப்புப் பணி இன்னும் சில மாதங்கள் தொடரும் போலிருக்கிறது. 2021 துவங்கி விட்டால், கட்சியை பலப்படுத்தி, தேர்தலுக்கு தயாராக வேண்டும். அதற்கு முன், அரசின் சாதனை திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும். தமிழகத்துக்கு என்னென்ன வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம்; ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை, மக்களிடம் கொண்டு செல்ல, இப்போதே பணிகளை வேகப்படுத்தி வருகிறார். ஆட்சிக்காலம் முடிவதற்குள் பல்வேறு பணிகள் முடிவுற்று, பயன்பாட்டுக்கு வந்து விடும். இது, மக்கள் மத்தியில், தமிழக அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தரும் என, முதல்வர் நம்புகிறார். தேர்தல் சமயத்தில், மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் வாய்ப்பாக இருக்குமென நினைக்கிறார்' என்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom