ரயில்களின் 'ஏசி' பெட்டிகளில் பயணியர் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு ஏற்பாடு

ஜூன் 1 முதல் ஏசி இல்லாத 200 ரயில்கள் ...

நாட்டில் ரயில்களின் 'ஏசி' பெட்டிகளில் பயணியர் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

நாட்டில் உள்ள 'ஏசி' ரயில் பெட்டிகளில் மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவுகளில் உள்ளது போல் சுத்தமான காற்றை செலுத்தும் வசதியை ஏற்படுத்த ரயில்வே தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:நாட்டில் 'ஏசி' ரயில்களில் அதிக அளவில் இயற்கை காற்றை செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முழுதும் 'ஏசி' வசதியில் இயங்கும் 15 ஜோடி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. பின் படிப்படியாக அனைத்து 'ஏசி' ரயில்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தற்போது 'ஏசி' ரயில் பெட்டிகளுக்குள் செலுத்தப்படும் காற்று ஒரு மணி நேரத்திற்கு ஆறு முதல் எட்டு முறை சுழற்சி முறையில் மாற்றப்படுகிறது. இதனால் 80 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட காற்றும் 20 சதவீதம் புதிய இயற்கை காற்றும் பெட்டிகளுக்குள் செல்கிறது. தற்போதைய புதிய முறையில் ஒரு மணி நேரத்தில் 16 முதல் 18 முறை காற்று மறு சுழற்சி செய்யப்படும். இதனால் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக புதிய காற்று செல்லும்.இது மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான 'ஏசி'யின் செயல்பாடு போல் இருக்கும் என்பதால் பயணியர் உற்சாகத்துடன் புதிய காற்றை அதிகம் சுவாசிக்கலாம்.

பழைய முறையில் பெட்டிகளுக்குள் செல்லும் காற்றில் 80 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்டது என்பதால் விரைவில் குளிர் நிலைக்கு மாறும். புதிய திட்டத்தில் ரயில் பெட்டி முழுமையாக குளிர் நிலையை எட்டுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதுடன் செலவும் அதிகரிக்கும்.கொரோனா பரவும் நேரத்தில் பயணியரின் நலன் கருதி கிருமிகள் பரவாத வகையில் இந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a comment

0 Comments