
பாகிஸ்தானில் பாலகோட் தாக்குதலுக்கு பயன்படுத்தியதை போன்ற (ஸ்பைஸ்) SPICE ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஷி இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
தற்போது இந்தியா-சீனா எல்லையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சீனாவை எதிர்கொள்ள இந்தியா ஏற்கனவே விமானப்படைகளை தயார் படுத்தி வருகிறது.
இந்நிலையில் எதிரிகளை கொத்தாக அழித்தொழிக்கும் ஸ்பைசஸ் 2000 ரக குண்டுகளை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுகள் 60 கி.மீ., முதல் 70 கி.மீ. தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. இந்த வெடிகுண்டில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்கல் திறன் விமானத்தில் உள்ள கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் SPICE 2000, போர் காலங்களில் பயன்படுத்தும் MK 84, BLU-109, APW, RAP-2000 ஆகிய ஆயுதங்களின் திறன்களை உள்ளடக்கியது ஆகும்.