Type Here to Get Search Results !

14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிக்க வாய்ப்பு



காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேலிடம் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மேலும் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிக்கும் வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு உள்ள தலைவர்களில் ஒருவர் அகமது படேல், 70. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகராக இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன், கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள அவர், ஊடகங்களுக்கு அதிகம் முகம் காட்ட மாட்டார். சோனியா, ராகுல் ஆகியோரின் தீவிர விசுவாசி. தேர்தல், வேட்பாளர் தேர்வு போன்ற விஷயங்களில், இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இப்படிப்பட்ட அகமது படேல் தான், தற்போது, அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கித் தவிக்கிறார். இதற்கு பின்னணியில் இருப்பது, குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக வைத்து செயல்பட்டு வரும், 'ஸ்டெர்லிங் பயோடெக்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர், வங்கியில், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை, வேறு வழிகளில் தவறாக செலவு செய்ததாக, சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் தனித் தனியே வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு விசாரணையை துவங்கின.

இதையடுத்து, இந்த மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். தற்போது இவர்கள், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை நாடு கடத்தி அழைத்து வர, அமலாக்க துறையும், சி.பி.ஐ.,யும் முயற்சித்து வருகின்றன. இதற்கிடையே, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றிய சுனில் யாதவிடம், அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகன் பைசல், இரவு பார்ட்டியில் பங்கேற்பதற்கான, 10 லட்சம் ரூபாய் செலவை, தான் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், பைசலின் டிரைவரிடம், ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்த அவர், தங்கள் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சேட்டன் சந்தேசரா அறிவுறுத்தலின்படி, இந்த பணத்தை கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த, 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அகமது படேலின் குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாக, அமலாக்க துறையினர் சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக, அகமது படேலின் மகன் பைசல், மருமகன் இர்பான் சித்திக் ஆகியோரிடம், அமலாக்க துறை அதிகாரிகள் கடந்தாண்டு விசாரணை நடத்தினர்.

அடுத்த கட்டமாக, அகமது படேலிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக அவருக்கு இரண்டு முறை, 'சம்மன்' அனுப்பப்பட்டது.தனக்கு, 70 வயதாவதாகவும், விசாரணைக்கு அமலாக்க துறை அலுவலகத்துக்கு வந்தால், கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்றும் கூறி, விசாரணைக்கு வர மறுத்து விட்டார். இதன்பின், அகமது படேல் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டனர். இது தொடர்பாக, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, அமலாக்க துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், டில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அகமது படேல் வீட்டுக்கு வந்தனர். முக கவசம் அணிந்திருந்த அவர்கள், ஏராளமான ஆவணங்களையும் வைத்திருந்தனர். ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துடன் அகமது படேலுக்கு உள்ள தொடர்பு, அவரது மகன் மற்றும் மருமகனுக்கு உள்ள தொடர்பு குறித்து, அதிகாரிகள், நீண்ட நேரம் துருவி, துருவி, அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

படேல் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில், படேல் மீது அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து, அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும், கட்சியின் பொருளாளருமான அகமது படேல், இந்த வழக்கில் சிக்கியுள்ளதால், கட்சியில் உள்ள மற்ற தலைவர்களுக்கும், இந்த வழக்கில் தொடர்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் உறவினருமான ரதுல் பூரிக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிரடிச் சோதனை நடத்தியது. தற்போது அகமது படேலிடமும் விசாரணை நடந்துள்ளது, காங்., கட்சியினரிடையே அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom