Type Here to Get Search Results !

தாய் இறந்த ஓரிரு நாளில் பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்

latest tamil news

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான்(54), சிகிச்சை பலனின்றி இன்று(ஏப்.,29) காலமானார்.

ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான். பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் இவரது தாயார் சாயிதா பேகம் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது இறுதி சடங்கில் கூட இர்பான் கலந்து கொள்ள முடியாமல் இருந்தார். இதனால் மன அழுத்த பிரச்னைக்கு ஆளாகி இருந்தார்.

மேலும் கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் இர்பான் கானுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாக இருந்து வந்த நிலையில் இன்று(ஏப்., 29) காலை உயிர் பிரிந்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 1966ம் ஆண்டு ஜன., 7ம் தேதி பிறந்தார். இளமை காலத்தில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்த இர்பான், நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமில் படித்தார். பின்பு மும்பைக்கு சென்று டிவி தொடர்களில் நடித்து வந்தார். அங்கு அவர் நடித்த பல தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 1988ம் ஆண்டு சலாம் பாம்பே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் பல படங்களில் நடித்தார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என அசத்தி வந்த இவர் ஹாலிவுட்டில் வெளியான ஜுராசிக் வேல்டு, லைப் ஆப் பை, அமேசிங் ஸ்பைடர் மேன் போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு சுதபா தேவேந்திர சிக்தர் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இர்பான் கானின் மறைவு பாலிவுட் திரைப்பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வெளியே செல்ல முடியாத சூழலில் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom