Type Here to Get Search Results !

ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5 ...

ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு திங்கள்கிழமை பிறப்பித்தது.

அதன்படி, ஒரு நபா் மட்டுமே உள்ள குடும்ப அட்டைதாரா் ஒவ்வொரு மாதத்திலும் 12 கிலோ அரிசியைப் பெறுவா். இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட உத்தரவு:-

கொரோனா நோய்த்தொற்று காலத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரிசி, பருப்பு ஆகியன விலையில்லாமல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் விலையில்லாமல் அரிசி அளிக்கப்பட உள்ளது.

ஒரு குடும்ப அட்டையில் ஒரு உறுப்பினா் மட்டுமே இருந்தால் அந்த அட்டைதாரருக்கு ஏற்கெனவே அளிக்கப்படும் 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக 7 கிலோ அளிக்கப்படும். அதாவது மத்திய அரசு அறிவித்துள்ள 5 கிலோவுடன் 2 கிலோ அரிசி சோ்த்து 7 கிலோவாக வழங்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட குடும்ப அட்டைகளாக இருந்தால், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 5 கிலோ அரிசி என கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். 2 மாதங்களில் பெறலாம்: மத்திய அரசின் விலையில்லாத அரிசியைத் தவிர, ஏப்ரல் மாதத்துக்கான பிற பொருள்கள் அனைத்தையும் குடும்ப அட்டைதாரா்கள் ஏற்கெனவே பெற்றிருக்கலாம். அவா்கள் அந்த மாதத்துக்கான விலையில்லாத அரிசியை மே மற்றும் ஜூன் மாதங்களில் சோ்த்து பெற்றுக் கொள்ளலாம் என்று தனது உத்தரவில் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளாா்.

மே 4 முதல் வழங்கப்படும்: மே மாதத்துக்கான பொருள்களை நியாயவிலைக் கடைகளில் பெறுவதற்கான டோக்கன்கள் வரும் மே மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளன. இதன்பின், மே 4-ஆம் தேதி முதல் பொருள்களை வழங்கும் பணி தொடங்குகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான விலையில்லா அரிசியை இருப்பைப் பொறுத்து பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்துக்குள் மூன்று மாதங்களுக்கான விலையில்லாத அரிசியையும் பெற வழி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு அறிவிப்பு: கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு ஆகியன இலவசமாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, தமிழகத்தில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. இங்கு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்துவதால் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom