Type Here to Get Search Results !

160 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை



ஜெனீவா: முறைசாரா பொருளாதாரத்தில் உள்ள 160 கோடி தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் உலகெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து, ஐ.நா.,வின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, வேலைவாய்ப்புகளில் கொரோனாவின் தாக்கம் பற்றி கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று (ஏப்.,29) வெளியிடப்பட்ட மூன்றாவது பதிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 200 கோடி தொழிலாளர்கள் முறைசாரா பொருளாதாரத்தில் உள்ளனர். தொழிலாளர்கள் சந்தையில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் இவர்கள். தற்போது, கொரோனா வைரசால் சரிந்துள்ள பொருளாதாரம், 160 கோடி தொழிலாளர்களின் வாழ்வுக்கு ஏற்ற வருமானம் ஈட்டும் திறனை கடுமையாக பாதித்துள்ளது.

ஊரடங்கினால், உலகளவில் இத்தொழிலாளர்களின் வருமானம், நெருக்கடி தொடங்கிய முதல் மாதத்தில் 60 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவில் இது 80 சதவீதத்துக்கு மேல் உள்ளது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 70 சதவீதம், ஆசியாவில் 21.6 சதவீதம் அளவிற்கு வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். சில்லறை வணிகம் மற்றும் உற்பத்தி போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் 43 கோடி நிறுவனங்கள் உள்ளன. இவை இடையூறுகளை சந்தித்துள்ளன. தொழிலாளர்களையும், சிறு நிறுவனங்களையும் காக்க துரித நடவடிக்கைகள் தேவை என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

“கோடிக்கணக்கான மக்களுக்கு வருமானம் இல்லை எனில், அவர்களுக்கு உணவு இல்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்காலம் இல்லை என்று பொருள். உலகளவில் லட்சக்கணக்கான தொழில்கள் மூச்சை நிறுத்தும் நிலையில் உள்ளன. அவர்களுக்கென சேமிப்புகளோ, கடன் வாங்கும் சூழலோ இல்லை. இது தான் உலகின் உண்மை நிலை. அவர்களுக்கு உடனடியாக உதவவில்லை என்றால் இறந்து போவார்கள்” என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கை ரைடர் எச்சரித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom