திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - கார்த்திகை தீபம் வரலாறு Thiruvannamalai Karthik Deepam

அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

ஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை
வாவென்றழைக்கு மலை அண்ணாமலை
தமிழர்களால் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடபடும் தீப திருநாள் இது
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.
பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.

ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:-
1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
2. நீர்- திருவானைக் காவல்
3. நெருப்பு- திருவண்ணாமலை
4. வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.

இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

தீபத் திருநாளில் ஆலயங்கள் தவிர இல்லங்களிலும் தீப வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் முடித்த பிறகு அருகில் உள்ள ஆலயத்தில் அர்ச்சனை செய்து முடித்தவுடன் வீட்டில் தினைமாவில் விளக்கேற்றி வழிபாடு செய்து விரதம் முடிப்பார்கள்.

விழா பிறந்த கதை:
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

பரணி தீபம்

கார்த்திகை தீப
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
மகாதீபம்.
பரணி தீபத்தினை
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
முதல் நாள் விழா:
அழியும் தன்மைகொண்ட உடலைப் போற்றி பேணிகாத்து, நாள்களை வீணாகக் கழிக்காமல், உடலின் போலித் தன்மையை அறிந்து, நினைவில் கொண்டு, இறைவனை வேண்டி அறியாமையை நீக்கியருள வேண்டும் என்பதை அறிவுறுத்தும்விதமாக, அதாவது `நிலையாமை’ என்னும் தத்துவத்தை உணர்த்துவதே முதல் நாள் விழா.

இரண்டாம் நாள் விழா:
மனித உடல் ஐம்புலன்களின் தன்மையோடு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றோடு, `தான்’ என்னும் அகந்தையையும் கொண்டது. ஆன்மாவுக்கு வடிவமாக இறைவன் கொடுத்த உடலும் மனமும் உண்மைத் தன்மை அற்றவையே என்பதைப் புரிந்துகொண்டு, உலக மாயையிலிருந்து விடுபடுதல் இரண்டாம் நாள் விழாவின் நோக்கம்.

மூன்றாம் நாள் விழா:
மூவகைப் பற்றுகளான மண், பொன், பெண்ணாசை ஆகியவற்றை நீக்க வேண்டும் என்பதுதான் இந்த விழாவின் உட்பொருள். உலகிலுள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாக அமைவது இந்த மூன்று காரணிகளே. எனவே, இந்த மூன்று காரணிகளின் மீதுள்ள பற்றை நீக்கினால், மிகச் சிறப்பான நல்வாழ்வு அமையும் என்னும் எண்ணத்தை ஆழமாக, வலிமையாக விளக்கும் தன்மைகொண்டது மூன்றாம் நாள் விழா.

நான்காம் நாள் விழா:
ஆன்மா, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய தோற்றங்களை நீக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வதாக அமைகிறது. இந்த நான்கினது கூறுகளால் மனமானது ஆசைவழிபட்டுத் துன்பங்களை இன்பம் என நினைத்து, கடவுளை அடைதலை முக்கிய நோக்கமாகக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் பிறவி எய்தி உழல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது நான்காம் நாள் விழாவின் நோக்கம்.

ஐந்தாம் நாள் விழா: 
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பூதங்களும், சாக்கியம் முதலான ஐந்து தவத்தையும், ஆணவம், கன்மம், மாயை, வயிந்தவம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் அகல, இறைவனை வேண்டுவது இந்த ஐந்தாம் நாள் விழாவின் நோக்கம். மனத்தின்கண் உள்ள மாசுகளை நீக்கினால், மலங்கள் விலகி, உள்ளம் இறைவனை நாடும் என்பதை உட்பொருளாகக்கொண்டது.

ஆறாம் நாள் விழா:
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகையாறும், கலாத்துவா முதலான ஆறு அத்துவாக்களும், இருத்தல் என்னும் கன்ம மல குணம் ஆறும் நிலையற்றவை என்று உணர்ந்து நீக்குவதால், இறைஞானம் பெற்று உய்வதே ஆறாம் நாள் விழாவின் நோக்கமாகும். இந்நாளில் ஆலயத்திலுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களின் செப்புப்படிமங்கள், சின்னக்கடைத்தெருவில் உள்ள அறுபத்து மூவர் மண்டபத்தில் மண்டகப்படி நிகழ்த்தப்படுகிறது.

ஏழாம் நாள் விழா:
அருணாசலேசுவரர் ஆலயத்தில் இந்நாளில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. குற்றங்களைக் களைந்து, மனதினைத் தூய்மைப்படுத்தும்விதமாக ஏழாம் நாள் விழா கொண்டாடப்படுகிறது. தேரில் அமர்ந்த இறைவன் உயிரையும், தேரிலுள்ள சங்கிலிகள் மனித மூச்சுக் காற்றையும் குறிக்கின்றன. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், எந்தவொரு காரியத்தையும் சாதிக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களைத் தேரோட்டம் விளக்குகிறது. காலையில் தேர் வலம் வருவதற்கு தேரில் ஏற்றப்பட்ட திருவுருவங்கள், இரவு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்புதலோடு ஏழாம் நாள் விழா நிறைவடைகிறது.

எட்டாம் நாள் விழா: 
முற்றும் உணர்தல், வரம்பில் இன்பமுடைமை, இயல்பாகவே பாசங்களை நீக்குதல், தன்வயத்தனாதல், பேரருள் உடைமை... முதலான எட்டும் இறைவனுக்குரிய குணங்கள். இந்த எட்டுக் குணங்களையும் இறைவன் ஆன்மாக்களுக்கு அருளல் வேண்டி எட்டாம் நாள் விழா நடத்தப்படுகிறது. இத்தகைய குணங்களை உலக உயிர்கள் பெறுவதால், அவற்றின் தீய குணங்கள் நீங்கி, நற்குணங்கள் நிலைக்கும் என்று கற்பிக்கப்படுகிறது. மாலையில் தீபம் ஏற்றுவதற்காகச் சேகரிக்கப்பட்ட காடாத் திரிகளுக்குச் சம்பந்த விநாயகர் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஒன்பதாம் நாள் விழா:
மூவகை வடிவங்களும், மூவகைத் தொழில்களும், மூவகை இடங்களில் உறைதலும் ஆகிய ஒன்பது நிலைகளும் நீங்கப் பெறல் என்பதைக் குறிப்பதே ஒன்பதாம் நாள் விழாவின் நோக்கம். மனித மனம் ஆசைவயப்படுதல் நிலையில் அனைத்தையும் துறந்து, உலக மாயைகளிலிருந்து வெளியேறி நற்கதி அடைவதே இந்த விழாவின் உட்பொருள். ஆறு மணியளவில் கொப்பரைக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, அந்தக் கொப்பரையின் இருபுறமும் மரம்வைத்துக் கட்டி, பக்தர்கள் பக்தியுடன் மலைக்குச் சுமந்து செல்கிறார்கள்.

பத்தாம் நாள் விழா:
ஒன்பது நாள்கள் திருவிழாவில் உயிர்களின் மலங்கள் நீங்கிட வேண்டி, மீண்டும் பிறவாத உயிர்நிலையான `வீடுபேறு’ என்னும் பேரின்பத்தைத் தந்தருள்வது பத்தாம் நாள் விழா கொண்டாட்டத்தின் உட்பொருள் உண்மை. அண்ணாமலையானை வணங்கிய பின், பர்வதராசகுல மரபினர் தீபமேற்றப்பெற்ற நெருப்பைப் பானையில் வைத்து, அது அணையாதவாறு மலைக்குக் கொண்டு செல்கின்றனர். அதிர்வேட்டுகளின் சத்தம் வானைப் பிளக்க, தீப்பந்த வளையங்கள் மலையை நோக்கிக் காட்டப்பட, பரணி தீபத்திலிருந்து நெருப்பைப் பெற்றுச் சென்ற பர்வதராசகுல பரம்பரையினர் மலை மேல் தீபம் ஏற்றுகின்றனர்.

இறைவன், உலக மக்களுக்கு ஒளி வடிவில் காட்சிதருகிறார். மலை மேல் ஏற்றப்பட்ட மகா தீபம் பதினோரு நாள்கள் எரிகிறது. தீபம் எரியும் கொப்பரை ஆறடி உயரம் கொண்டது. சுமார் 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் துணி நாடா, ஐந்து கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. ஐம்பூதங்களில் ஒன்றான ஜோதி (அக்னி) வடிவாக எழுந்தருளி உலக உயிர்களைக் காக்கும் தத்துவத்தைத் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் பின்வரும் மூன்று நாள்களில் பராசக்தி அம்மன் தெப்பத்திருவிழா, சுப்பிரமணியன் தெப்பத்திருவிழா, சண்டிகேசுவரர் தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. இறுதி நான்கு நாள்கள் இறையுருவங்களைப் புனித நீராட்டும் விழாக்களாக நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம் ஏற்றுவதால், பல அற்புத நன்மைகள் நடைபெறும் என்று நமது புராண, இதிகாசங்களின் வழி அறிய முடிகிறது. 

ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள்’ என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான். 

`திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது.
`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலைநுனியிற் காட்ட நிற்போம்….
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’
தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, `கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், `இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார். 

மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி, பொரி பொரித்து வழிபடுவது சிறப்பு. அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோயில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம். திருவண்ணாமலையில் தீப தரிசனத்தைக் கண்ட பிறகே, அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றப்படுகிறது. 

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காலம் கார்காலம். இந்தக் காலத்தில் நடைபெறும் இந்த விழா, கார்காலத்தை முடித்துவைக்கும் விழாவாகவும் அமைகிறது. அறிவியல் நோக்கில் உற்றுநோக்கினால், பல பயன்களை உள்ளடக்கியதை அறியலாம். கார்த்திகை தீபத் திருவிழா வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தருகிறது. மேலும் விளக்கிலிருந்து கிளம்பி வான மண்டலத்தில் பரவும் கார்பன் வாயு மழை மேகங்களைக் கலைத்து, மழை பெய்வதைத் தடுக்கும் தன்மை வாய்ந்தது. 

திருவிழாக்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், நல்வாழ்வு வாழும் முறைகளையும், அறத்தையும் போதிப்பதாக உள்ளதை அருணாசலேசுவரர் ஆலய விழா உணர்த்துகிறது. இறைவன் தொடக்கமும் முடிவுமின்றி, தானே எல்லாவற்றையும் படைத்து, காத்து, ஒடுக்கி மீண்டும் படைத்து ஒளியாக நிற்கும் தத்துவத்தை திருவண்ணாமலைத் தலத்தில் ஏற்றப்படும் பரணிதீபம் உட்பொருளாகக் கொண்டிருக்கிறது.