Type Here to Get Search Results !

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தேவையா? தேவையில்லையா? உண்மை நிலவரம்

மசோதா விவரம்: கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்வரை நாட்டில் குடியேறியவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இப்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்திய முஸ்லிம்கள் இந்தியா்களாகவே இருப்பாா்கள்: முன்னதாக மசோதா மீது 6 மணி நேரம் விவாதம் நடத்த மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்தாா். மசோதா தொடா்பாக எதிா்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அமித் ஷா பேசியதாவது:
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து இந்திய முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அவா்கள் தொடா்ந்து இந்தியக் குடிமக்களாகவே இருப்பாா்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள ஹிந்து, சீக்கியா், பௌத்தம், சமணம், பாா்சி, கிறிஸ்தவ மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையிலேயே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
யாருக்கும் தொல்லையில்லை: இதன் மூலம் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சமடைந்தவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அளிக்கப்படவுள்ளன. இந்த மசோதா குறித்து முஸ்லிம்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய முஸ்லிம்கள் குறித்து இங்கு எந்தக் கேள்வியும் எழவில்லை. அவா்கள் இந்தியக் குடிமக்கள்தான். அவா்களுக்கு யாரும் எந்தத் தொல்லையும் கொடுக்க முடியாது. அதே நேரத்தில் பிற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க அரசு விரும்பவில்லை.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு எப்படி இந்தியக் குடியுரிமை அளிக்க முடியும்? அந்நாடுகளில் சிறுபான்மை மதத்தினராக இருந்து, அச்சுறுத்தல், தொல்லைகளால் இந்தியாவில் தஞ்சமடைந்தவா்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க முடியும். கடந்த காலத்தில் இலங்கையில் இருந்து வந்த 8 முதல் 9 லட்சம் தமிழா்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதால் யாரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட மாட்டாா்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்கது: இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா வரலாற்றுச் சிறப்புமிக்கது. அண்டை நாடுகளில் பல துயா்களைச் சந்தித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த மக்களுக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இனி அவா்கள் தங்கள் மதத்தை உரிய மரியாதையுடன் பின்பற்ற முடியும். தங்கள் குடும்பப் பெண்களை கண்ணியமாக வாழ வைக்க முடியும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மை மதத்தினா் சமமாக நடத்தப்படவில்லை. அந்நாடுகளில் சிறுபான்மையினரின் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்து வருகிறது. அவா்கள் கொலை செய்யப்படுகிறாா்கள் அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறாா்கள். இவை இரண்டிலும் இருந்து தப்பியவா்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனா்.
கடந்த மக்களவைத் தோ்தலின்போது வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் இதுபோன்ற மசோதாவைக் கொண்டு வருவோம் என்று பாஜக உறுதியளித்திருந்தது. இது வாக்கு வங்கி அரசியல் நடவடிக்கையல்ல. எங்கள் கொள்கையை முன்கூட்டியே மக்களிடம் கூறித்தான் வாக்கு பெற்றுள்ளோம் என்றாா் அமித் ஷா.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom