நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை தாங்கியபடி புதன்கிழமை பிற்பகலில் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. - சி48 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள், வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவுவதற்காக அனுப்பப்படுகிறது. விண்ணில் செலுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 576 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும். முன்னதாக, 2009-இல் ரிசாட்-2, 2012-இல் ரிசாட்-1 செயற்கைக்கோள்களையும், கடந்த மே 22-ஆம் தேதி ரிசாட்-2பி செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் தொடாா்ச்சியாக, கூடுதல் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காக ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை இப்போது ஏவுகிறது.
ரிசாட்டுடன் அனுப்பப்படும் 9 செயற்கைக்கோள்கள்: ரிசாட் 2பி ஆா்1 செயற்கைக்கோளுடன் வா்த்தக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் விண்ணில் அனுப்பப்படுகின்றன. இதில் அமெரிக்காவுக்குச் சொந்தமான 6 செயற்கைக்கோள்களும், இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் அடங்கும்.